வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த வன்னிப்பேர் கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கனமழையின் காரணமாக அங்குள்ள ஏரி நிரம்பி அந்த நீர் வன்னிப்பேர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுவதால் வன்னிப்பேர் கிராமத்துக்கு செல்லும் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. அக்கிராமத்தில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்து உள்ளதால் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அரசு பள்ளிகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் மற்றும் கிராமத்திலுள்ள மக்கள் கிராமத்தை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் வருடா வருடம் மழைக்கு இதேபோல் கிராமத்தை வெள்ள நீர் சூழ்ந்துக்கொள்கிறது எனவும், வெள்ள நீர் செல்லும் சாலையில் மேல்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.