தமிழகத்தில் வரும் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று, முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டி பேசினார்.
இந்த விழாவில் அமித்ஷா பேசுகையில், மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக அமல்படுத்தும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. கொரோனா தடுப்பு பணிகளில் மட்டுமல்ல, நிர்வாகத் திறனிலும் தமிழகம் தான் இந்த ஆண்டு முதலிடம் பெற்றுள்ளது என்றார். தமிழகம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில்மிகுந்த முன்னேற்றம் கண்டு வருகிறது. பாறை போன்ற அதிமுக ஆட்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று அமித்ஷா குறிப்பிட்டார்.
மன்மோகன் ஆட்சியை விட எங்கள் பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு அதிக அளவில் பட்ஜெட் ஒதுக்கினோம்; 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திமுக – காங்கிரஸ் தமிழகத்திற்கு செய்ததை பட்டியலிட முடியுமா? என்று, அமைச்சர் உள்துறை அமைச்சர் அமித் ஷா காங்கிரஸ் – திமுகவுக்கு சவால் விடுத்தார்.
உலகின் தொன்மையான மொழியாம் தமிழ் மொழியில் பேச முடியாததற்கு வருந்துவதாகவும் அமித்ஷா தனது உரையில் குறிப்பிட்டார்.
முன்னதாக பேசிய முதல்வர் பழனிச்சாமி, கொரோனா தடுப்பில் பிரதமரின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு முழுமையாக துணை நிற்கும்; தமிழகத்தின் நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மழை நீர் வீணாவைதைத் தடுக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். பருவ காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் மேலும் உயர பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு விரைந்து அனுமதிக்க வேண்டும். தமிழகத்தின் முக்கிய நதி நீர் இணைப்புத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டும் என்றார்.
துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசும்போது, இனிவரும் தேர்தல்களில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும்; வரும் 2021 தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அதிக இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும் என்றார்.