சென்னை,
அமித்ஷா சொன்ன அந்த ஒத்த வார்த்தையால் அதிமுக கூடாரமே அலறி போயுள்ளது. அதிலும் அதிமுக தலைமை செம டென்ஷனில் இருக்கறது. இந்த முறை தென்மாநிலங்களில் தாமரையை மலர வைத்தே தீருவது என்று பாஜக தலைவர்கள் ஒரு முடிவில் இறங்கி உள்ளனர்.
அதற்காகவே இந்த பக்கம் அடிக்கடி வந்து போய்க் கொண்டும் உள்ளனர். அந்த வகையில், கன்னியாகுமரியில் பிரச்சாரத்துக்கு அமித்ஷா வந்தார். அப்போது, பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து வாக்கு கேட்டார்.
“தென் மாநிலங்களில், ஆட்சி அமைக்க முடியவில்லை என்பதற்காக, பாஜக ஒன்றும் சோர்ந்து போய்விடவில்லை. வரப்போகும் தேர்தலில் நிச்சயம் அதை சாதிப்போம். ஏனென்றால், தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி அமைவதை, மக்கள் எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்‘ என்றார்.
இந்த வார்த்தை சொன்னதில் இருந்தே, அதிமுக கிடுகிடுத்து போயுள்ளது. ஒருமுறை எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசும்போது, இப்படித்தான் சொன்னார். “தேசிய ஜனநாயக கூட்டணி மூலமாக அறிவிக்கப்படும் முதல்வர் வேட்பாளரே தமிழகத்தை ஆட்சி செய்வார்” என்றார்.
இந்த பேச்சுக்கு அப்போதே மூத்த தலைவர் கேபி முனுசாமி டென்ஷன் ஆனார். ”கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. எடப்பாடியார் தலைமையில், அதிமுக ஆட்சி மீண்டும் அமையும்,” என்று பதில் சொல்லி முருகனின் பேச்சினை மறுத்தார்.
ஆனால், அப்போதும் முருகன் விடவில்லை. “அதிமுக பாஜக கூட்டணி தொடர்கிறது, ஆனால், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை கே.பி முனுசாமி கேள்விக்கு, விரைவில் பதில் கிடைக்கும் என்று இன்னொரு பஞ்ச் வைத்தார்.
இதற்கு நடுவில் வானதி சீனிவாசனும், ”கூட்டணி அரசு என்பது தேர்தலுக்கு பிறகு உருவாகும் சூழலைப்பொறுத்தது” என்று அவர் ஒரு பஞ்ச் வைத்து பேசினார். இதுபோன்ற சூழலில்தான் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் அதிமுக மும்முரமாக இறங்கியது.. அதனால், பாஜகவின் அந்த பேச்சும் அத்துடன் முடிந்துவிட்டது என்று பார்த்தால், இதையே அமித்ஷா இப்போது சொல்லி உள்ளார்.
கூட்டணி ஆட்சி என்றால், அதிமுகவில் பாஜக மட்டுமில்லை, பாமகவும்தான் உள்ளது. அப்படி என்றால், ஆட்சி அமைப்பதில் பாமகவுக்கும் பங்கு இருக்கிறதா? என்று தெரியவில்லை.. இது சம்பந்தமாக ஒருசில அரசியல் நோக்கர்களிடமும் நாம் பேசினோம். அமித்ஷாவின் கருத்து பற்றியும் கேட்டோம்.
அவர்கள் சொன்னதாவது: இந்த யுக்தியை ன் வடமாநிலங்களில் பாஜக செய்து கொண்டிருக்கிறது.. அவர்களுக்கு தேர்தலுக்கு முந்தைய அரசியல் என்பதைவிட தேர்தலுக்குபிறகு அரசியல் என்பதில்தான் கவனம் செலுத்துகிறது.
எங்குமே தனி மெஜாரிட்டி கிடைக்காது என்பது பாஜகவுக்கும் தெரியும்.. அதனால்தான் கூட்டணிகளின் முதுகில்சவாரி செய்து கொண்டு, அவர்களை வைத்து ஆட்சியில் பங்கு கேட்டு, இறுதியில் அந்த ஆட்சியையே மொத்தமாக கையில் எடுப்பதுதான் இவர்களின் டெக்னிக்.
இதை நாம் பீகார் தேர்தலிலேயே பார்த்தோம். இப்போது புதுச்சேரியில் அதுதான் நடக்க போகிறது. ரங்கசாமி மட்டும் இதில் உஷாராக இருந்தால், பாஜக கால் ஊன்ற அங்கு வாய்ப்பில்லை. என்ஆர் காங்கிரஸ் போலவேதான், இங்கும் அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க போகிறது.
அதிமுகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காது. அதனால்தான் கூட்டணி அரசு அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று பொருள்படும்படியும் அமித்ஷா பேசியிருக்கலாம். அல்லது வெளியாகி வரும் ஒருசில தனியார் கருத்து கணிப்புகளின் அடிப்படையில் வைத்து கொண்டும் இப்படி பேசியிருக்கலாம்.
இருந்தாலும், தேர்தலுக்கு முன்பே இப்படி கூட்டணி ஆட்சி என்று சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. அதிமுகவை ஆழம் பார்க்கும் வார்த்தைகள் இவையெல்லாம். எத்தனையோ கணிப்புகள் பல தேர்தல்களில் பொய்யாகி வருவதையும் அவர் நினைவில் கொள்ள வேண்டும்.
பிரதமராகட்டும், அமித்ஷாவாகட்டும் “அதிமுக கூட்டணி” என்ற வார்த்தைகளையே அவ்வளவாக பேசுவதில்லை. பயன்படுத்துவதுமில்லை. “தேசிய ஜனநாயக கூட்டணி” என்ற ஆங்கிளில்தான் தமிழக அரசியலை நகர்த்துகிறார்கள்.
அதாவது அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை, தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக உள்ளது என்பதுதான் அவர்களின் தொணி.” என்றனர். இப்படி அமித்ஷா சொன்ன வார்த்தைகள் அதிமுக வட்டாரத்தை அசைத்து வந்தாலும், தேர்தலுக்கு பிறகு அப்படி என்னதான் நடக்க போகிறது.. பார்ப்போம்.!