கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 11-வது நாளில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 6 முறை சாம்பியனுமான செரீனா வில்லியம்ஸ் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான விக்டோரியா பெலாரசின் அஸரென்காவை எதிர்கொண்டார்.முதல் செட்டில் ஒரு கேமை மட்டுமே பறிகொடுத்த செரீனா அந்த செட்டை 34 நிமிடத்தில் தனதாக்கினார். ஆனால் அதன் பிறகு சுதாரித்து கொண்டு செயல்பட்ட அஸரென்கா தனது வலுவான ஆட்டத்தின் மூலம் செரீனாவுக்கு பதிலடி கொடுத்து 2-வது செட்டை கைப்பற்றினார். வெற்றி யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது செட்டின் போது செரீனா இடது கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டதுடன், மைதானத்தில் சிகிச்சை பெற்று தொடர்ந்து ஆடினார். இருப்பினும் அவரால் சரிவில் இருந்து எழுச்சி பெற முடியவில்லை. 1 மணி 56 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் அஸரென்கா 1-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் செரீனாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு 3-வது முறையாக முன்னேறினார்.
24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று ஆஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் செரீனாவின் கனவு அரைஇறுதியுடன் தகர்ந்து போனது. 2017-ம் ஆண்டு குழந்தை பெற்றுக்கொண்ட 38 வயதான செரீனா அதன் பிறகு எந்த கிராண்ட்ஸ்லாமும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 2018-ம் ஆண்டு சாம்பியனுமான ஜப்பானின் நவோமி ஒசாகா 7-6 (7-1), 3-6, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியை சாய்த்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் 2 மணி 8 நிமிடம் நீடித்தது.இன்று (சனிக்கிழமை) நடைபெறும் மகுடத்துக்கான இறுதிஆட்டத்தில் நவோமி ஒசாகா–விக்டோரியா அஸரென்கா பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.