ஓசூர் கொள்ளையர்களை காட்டி கொடுத்த ஜி.பி.எஸ் கருவி

25 கிலோ நகை கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்கள் பிடிபட்டது எப்படி என பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான 25 கிலோ நகைகளை கொள்ளையடித்த வழக்கில் வடமாநில கொள்ளை கும்பல் 7 பேர் தெலுங்கானா மாநிலத்தில் நேற்று பிடிபட்டனர். அவர்கள் பிடிபட்டது எப்படி என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.

அவை வருமாறு:- ஓசூரில் தனியார் நிதி நிறுவன ஊழியர்களை தாக்கி ரூ.12 கோடி மதிப்பிலான 25 கிலோ நகைகளை கொள்ளையடித்து கொண்டு வடமாநில கொள்ளையர்கள் நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து தப்பினார்கள். அவர்கள் தப்பி சென்ற அனைத்து காட்சிகளும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

கொள்ளையர்கள் தங்களை மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்ளக்கூடாது என்பதற்காக ஹெல்மெட் மற்றும் முகமூடி, முககவசம் அணிந்து வந்திருந்தனர். அவர்கள் செல்லும் போது வங்கி ஊழியர்களின் செல்போன்களை பறித்துக் கொண்டு சென்றனர்.

கொள்ளையர்கள் அந்த செல்போன்களை கர்நாடக மாநில எல்லையில் போட்டு சென்றனர். அப்படி போட்டால் போலீசார் கர்நாடகாவில் தான் நம்மை தேடுவார்கள் என்று கொள்ளையர்கள் எண்ணினார்கள். ஆனால் போலீசாரோ செல்போன் கிடைத்ததை விட்டுவிட்டு வேறு விதமாக விசாரணையை தொடங்கினார்கள்.

கொள்ளையர்கள் எடுத்து சென்ற நகைகள் அனைத்தும் வாடிக்கையாளர்களால் அடமானம் வைக்கப்பட்ட நகைகள் ஆகும். தனியார் நிதி நிறுவனத்தில் அந்த நகைகள் அனைத்தையும் கவர்களில் போட்டு, அந்த கவரில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருந்தது.

மேலும் அவர்கள் நகைகளை கொண்டு சென்ற பையிலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருந்தது. அது கொள்ளையர்களுக்கு தெரியவில்லை. அதை வைத்து போலீசார் கொள்ளையர்கள் எங்கு செல்கிறார்கள் என கண்காணிக்க தொடங்கினார்கள்.

இதில் கொள்ளையர்கள் தனியார் நிறுவன ஊழியர்களின் செல்போன்களை கர்நாடகாவில் போட்டு விட்டு அவர்கள் தெலுங்கானா மாநிலம் நோக்கி தப்பி சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் தெலுங்கானா மாநிலம் சைபராபாத் பக்கமாக சென்றது கிருஷ்ணகிரி போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு உடனடியாக சென்று கொள்ளையர்களை பிடிப்பது என்பது இயலாத காரியம். இதனால் தெலுங்கானா மாநில போலீசாருக்கு கிருஷ்ணகிரி போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தெலுங்கானா மாநில போலீசார் ஜி.பி.எஸ். கருவியின் டவர் லொகேசன் பார்த்தனர்.

அதில் ஒரு கன்டெய்னர் லாரி மற்றும் டாடா சுமோவை காட்டியது.இதையடுத்து அந்த கன்டெய்னர் லாரியை போலீசார் விரட்டி சென்று சுற்றி வளைத்து பிடிக்க அதில் டிரைவரை தவிர யாரும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பின்னால் சென்று பார்த்தபோது ரகசிய அறை வைத்து அதில் 4 கொள்ளையர்களும், பின்னால் வந்த சுமோ காரில் 3 கொள்ளையர்களும் வந்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

 

 

 

Translate »
error: Content is protected !!