கூடுதல் கமிஷனர் பெயரில் பேஸ்புக் தொடங்கி பணம் பறிக்க முயற்சி: மோசடி கும்பலுக்கு சைபர் கிரைம் வலை

 

சென்னை நகரில், போலீஸ் அதிகாரிகள் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி மோசடி செய்யும் கும்பலின் கைவரிசை தொடர்கதையாகி வருவது காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நகர தெற்கு கூடுதல் கமிஷனராக இருப்பவர் தினகரன். இவரது பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பணமோசடி செய்ய முயன்றிருப்பதாக சென்னை, கீழ்ப்பாக்கம் சைபர் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கமிஷனர் தினகரனின் சார்பில் அலுவலக எழுத்தராக பணிபுரிந்து வரும் மார்ட்டின் விக்டர் சாம் வேப்பேரி போலீசில் அது தொடர்பான புகார் மனுவை அளித்துள்ளார்.

 

அதில் அவர் கூறியுள்ளதாவது, ‘‘சென்னை நகர சட்டம், ஒழுங்கு தெற்கு கூடுதல் கமிஷனர் அலுவலகத்தில் முகாம் எழுத்தராக நான் பணிபுரிந்து வருகிறேன். தினகரனின் முகநூல் கணக்கை அடையாளம் தெரியாத நபர்கள் போலியாக தொடங்கியுள்ளனர். மற்றவர்களுக்கு உதவ பணம் தேவை என்று கூறி பலரிடம் பணம் மோசடி செயன்றுள்ளன். அந்த நபர் யார் என்பது குறித்து புலனாய்வு மேற்கொண்டு அதனை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று அந்த புகாரில் கூறியுள்ளார். அந்த புகார் தொடர்பாக கீழ்பாக்கம் சைபர் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் இதே போல சென்னை மாதவரம் உதவிக்கமிஷனர் அருள் சந்தோஷமுத்து, தண்டையார்பேட்டை உதவிக்கமிஷனர் ஜூலியஸ் சீசர் பெயர்களில் போலி பேஸ்புக் தொடங்கி பணம் பறிக்க முயன்றதாக ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திரைமறைவில் இந்த மோசடியை அரங்கேற்றும் நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மர்ம நபர்கள், ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து இதுபோன்ற மோசடி முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சைபர் கிரைம் போலீசாரின் புலனாய்வில் தெரியவந்துள்ளதாம்.

Translate »
error: Content is protected !!