தீபாவளி போனஸ் 20% வழங்காவிட்டால் சிறப்பு பேருந்துகள் இயக்க மாட்டோம் என்று எச்சரித்து, திருச்சியில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மண்டல அரசு போக்குவரத்து அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி, எல்பி எஃப், ஐ என் டி யு சி, சிஐடியு உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டவர்கள், தங்கள் கோரிக்கைகளாக தீபாவளி போனஸ் தொகை 10% அறிவித்ததை மறுபரிசீலனை செய்து, 20% ஆக உயர்த்தி வழங்க வேண்டும்; டிஏ உள்ளிட்ட நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்; அகவிலைப்படியை உயர்த்த வேண்டும்; வருங்கால வைப்பு நிதி வட்டி தொகையை குறைக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட ஏராளமான போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். தமிழக அரசு உடனடியாக தீபாவளி போனஸ் 20% வழங்காவிட்டால், தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்க மாட்டோம் என தொழிற்சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.