கோவையில் கத்திமுனையில் காரை கடத்திய குற்றவாளி கைது

கோவையில் கத்திமுனையில் கார் கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நாட்டுக்கல்லைச் சேர்ந்தவர் முகமது முஸ்தபா. இவரது நண்பர் சாஜா உசேன். இவர்கள் இருவரும் கடந்த ஜனவரி மாதம் 11-ஆம் தேதி சொகுசு காரில் கேரளாவில் இருந்து கோவைக்கு வந்தனர்.

பின் ஒப்பணக்கார வீதியில் ஒருவரைச் சந்தித்து அட்டைப்பெட்டி ஒன்றை வாங்கிக் கொண்டு மீண்டும் இரவு 9 மணியளவில் கேரள மாநிலம் மன்னார்காடு நோக்கிச் சென்றனர். அப்போது கார் மதுக்கரை மரப்பாலம் அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி ஒன்று காரை வழிமறித்தது.

இதையடுத்து மற்றொரு காரில் பின் தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், முகமது முஸ்தபா காரின் ஓட்டுநர் இருக்கை அருகே உள்ள கண்ணாடியை உடைத்தனர். உள்ளே இருந்த இருவரையும் தாக்கி விட்டு சொகுசு காருடன் மர்ம கும்பல் கேரளா நோக்கிச் தப்பிச் சென்றது. இதையடுத்து மதுக்கரை போலீசில் முகமது முஸ்தபா புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் காவல் ஆய்வாளர் முருகேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே மதுக்கரையில் கொள்ளையடிப்பட்ட கார் கன்னியாகுமரி மாவட்டம் மித்திரவிளை காவல் நிலைய எல்லையில் இருந்தது மீட்கப்பட்டது.

காரை வழிமறித்த லாரி குறித்து சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தபோது லாரி கேரளா சென்றது தெரியவந்தது. இந்த வழக்கில் காரை வழிமறிக்க உதவிய லாரி ஓட்டுநர் முகமது அப்சல் என்பவரை கைது செய்தனர்.

இந்நிலையில் தலைமறைவான மற்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த அக்பர் என்பவரை தனிப்படை போலீசார் பிடித்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பணத்துடன் தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளியை பிடிக்க இரண்டு தனிப்படை கேரளா விரைந்துள்ளது. விசாரணைக்குப் பின் அக்பரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவிநாசி சிறையில் அடைத்தனர்.

Translate »
error: Content is protected !!