சாத்தான்குளம், தந்தை மகன் போலீஸ் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை முடிவுற்ற நிலையில் சிபிஐ மதுரை ஐகோர்ட் கிளையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடி, மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் கடந்த ஜுன் மாதம் 19ம் தேதியன்று சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி சப்–ஜெயிலில் அவர்கள் அவசர அவசரமாக ரிமாண்டு செய்யப்பட்டனர். இந்நிலையில் தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
ஐகோர்ட்டு மதுரை கிளை இந்த சம்பவம் தொடர்பாக தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. கோர்ட் உத்தரவின்பேரில் சிபிசிஐடி போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர். சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் எஸ்ஐக்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முதல்நிலை காவலர் முத்துராஜா, சிறப்பு எஸ்ஐ பால்துரை, தலைமைக் காவலர் சாமிதுரை, முதல் நிலைக் காவலர்கள் வெயில்முத்து, செல்லதுரை உள்பட 10 பேரை கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு சிபிஐ அதிகாரிகள் கைக்கு சென்றது. சிறப்பு எஸ்ஐ பால்துரை கொரோனா தொற்றால் இறந்ததால் மற்ற 9 பேர் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
தந்தை-, மகன் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் இறந்தவர்களின் குடும்பத்தினர், சாத்தான்குளம் போலீஸ் நிலையம் மற்றும் கோவில்பட்டி சிறைத்துறை அதிகாரிகள் என பலதரப்பினரிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். இறுதிக்கட்ட விசாரணையை எட்டிய நிலையில் சாத்தான்குளம் வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. 120 பி (கூட்டுச்சதி), 302 (கொலை), 342 (பொய் வழக்கில் சிறையில் அடைத்தல்), 201 (தவறான தகவல் அளித்தல்), 182 (அரசு அதிகாரத்தை பயன்படுத்தி தாக்குதல்) உள்ளிட்ட பிரிவுகளில் சிபிஐ குற்றங்களை தகுந்த சாட்சியங்களுடன் தாக்கல் செய்துள்ளதாக சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.