சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களுக்கும் இந்தியாவிலிருந்து வெளி நாடுகளுக்கு செல்பவர்களுக்கும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் அதன் பின்பு தான் அவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து 169 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது,அதில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த பெண் ஒருவரின் சான்றிதழ்களை சோதனை செய்த போது அவர் கொரோனா சான்றிதழில் பாஸிட்டிவ் என இருந்துள்ளது,இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக அவரை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த பெண் கடந்த டிசம்பர் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளார். இந்நிலையில் விமானம் ஏறுவதற்கு முன்பு நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதி என முடிவு வந்துள்ளது,அவர் எப்படி அனுமதிக்கப்பட்டார், அவரை பயணம் செய்ய அனுமதித்தவர்கள் யார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,
தற்போது அந்த பெண் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவருடன் பயணித்த 168 பேரை கண்காணிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது, விமானத்தில் பயணம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக இந்த தவறு நடந்துள்ளதாக தெரிய வருகிறது.