சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், ஏரிகள் நிரம்பி வருகின்றன. இதனால், சென்னை நகரம் மீண்டும் வெள்ளத்தில் சிக்குமோ என்ற கவலை உருவாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து, பல மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து, தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 909 ஏரிகளில் 67 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பி நீர் வெளியேறி கொண்டிருக்கிறது. 127 ஏரிகள் 75 விழுக்காடும், 206 ஏரிகள் 50 விழுக்காடும் நிரம்பியுள்ளன.
சென்னை மக்களின் குடிநீர் தேவையை 20 சதவீதம் பூர்த்தி செய்து வரும், பூந்தமல்லி அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 24 அடி; கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி ஆகும். தற்போது ஏரியின் நீர்மட்டம் 21 அடியைத் தாண்டியுள்ளது. கொள்ளளவு 3000 மில்லியன் கன அடியை எட்டியது.
கடந்த 2015 ஆம் ஆண்டு, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் அடையாற்றில் திறக்கப்பட்டதால் சென்னை நகரில் வெள்ள அபாயம் ஏற்பட்டு, மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது.
இந்த ஆண்டு பெய்து வரும் கன மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் எனவே ஏரி நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டால் 2015 வெள்ளம் போல் மீண்டும் ஏற்பட்டுவிடுமோ என்ற கவலை, சென்னைவாசிகல் மத்தியில் தொற்றிக் கொண்டிருக்கிறது.
இது குறித்து, சென்னை மாநகராட்சி தரப்பில் கூறும்போது, சென்னையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட மழை பாதிப்புகள் இம்முறை நிகழாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஏரியின் முகதுவாரங்கள் எண்ணூர் முதல் முட்டுக்காடு வரையில் பொதுப்பணி துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றனர்.
அதேபோல் வருவாய்த்துறையினர், போலீசார் ஆகியோர் திருநீா்மலை, குன்றத்தூா், வழுதலம்பேடு, நத்தம், திருமுடிவாக்கம், சிறுகளத்தூா், மணப்பாக்கம் ஆகிய ஆற்றின் கரையோரப் பகுதிகளைக் கண்காணித்து வருகின்றனர்.