சென்னை,
எழும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கமிஷனர் அலுவலக சாலையில் திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்த பெண் காவலர் புனிதவள்ளி (28), அதிகாலை 4 மணியளவில் செல்போன் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் புனிதவள்ளியின் சாம்சங் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து புனிதவள்ளி எழும்பூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அங்கு பொருத்தியிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதனையடுத்து செல்போன் பறித்துச் சென்ற புரசைவாக்கத்தைச் சேர்ந்த சீனிவாசன் (எ) தவக்களை (23) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து புனிதவள்ளியின் சாம்சங் செல்போன் மீட்கப்பட்டது.
விசாரணையில் செல்போன் பறிப்புச் சம்பவத்தில் ஈடுபடும் முன்பு ஏதேனும் ஒரு இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு அதில் செல்போன் பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டு பின்னர் மீண்டும் இருசக்கர வாகனத்தை திருடிய இடத்திலேயே நிறுத்திவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் சீனிவாசன் மீது வேப்பேரி, தலைமைச்செயலக காலனி, ஓட்டேரி, எழும்பூர் காவல் நிலையங்களில் அடிதடி, மாவா சம்மந்தப்பட்ட வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. மேலும் மற்றொரு தலைமறைவு குற்றவாளியை பிடிக்க காவல் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்ட குற்றவாளி சீனிவாசன் (எ) தவக்களை நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.