சென்னை அடையாறில் தொடர் வழிப்பறி 5 பேர் கும்பல் கைது

 

சென்னை, செப். 13–

சென்னை அடையாறு காவல் மாவட்டத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட அரசு ஆஸ்பத்திரி ஊழியர் உள்ளிட்ட 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து செல்போன்கள், போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்த சத்தியவானி என்ற பெண் கடந்த 3ம் தேதி அடையாறு இந்திரா நகர் முதல் அவென்யூவில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு டியோ பைக்கில் வந்த இருவர் அவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர். அதே போல் கடந்த 2ம் தேதியன்று பெசன்ட் நகர் ஆவின் பால்பூத் அருகே ராமாபுரம் பாபா என்பவரிடம் பைக்கில் வந்த நபர்கள் செல்போனை பறித்துச் சென்றனர். மேலும் அதே நாளில் பெசன்ட் நகர் 3 வது அவென்யூவில் சுந்தரம் என்பவரிடம் கத்தியை காட்டி அவரது விலையுயர்ந்த ஐ போன் மற்றும் 2 பவுன் செயினைப் பறித்துச் சென்றனர்.

இந்த தொடர் வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது செய்ய கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் தினகரன், இணைக்கமிஷனர் பாபு மற்றும் அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையில் உதவிக்கமிஷனர் கவுதமன் இன்ஸ்பெக்டர் மனோகரன், தலைமைக் காவலர்கள் முகிலன், சதிஸ்குமார், கிரி, ஜானி விஜய், சண்முகானந்தம், முதல் நிலை காவலர் லோகநாதன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் போலீசார் கொள்ளையர்களை அடையாளம் கண்டனர். அதனைத் தொடர்ந்து திருவல்லிக்கேனி பகுதியைச் சேர்ந்த மொய்னுதீன் (20), ஐஸ்அவுசைச் சேர்ந்த சேர்ந்த 17 வயது சிறுவன், பனையூர் சாயுப் ஹீசைன் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சித்தகவல்கள் வெளிவந்தன.

கொள்ளையர்கள் பயன்படுத்திய டியோ இருசக்கர வாகனம் ஐஸ் ஹவுஸ் பகுதியில் திருடியுள்ளனர். அதன் ஆர்சி புத்தகத்தை ‘பிக்ஸ் ஆர்ட்’ என்ற மொபைல் அப்ளிகேசன் மூலம் எடிட் செய்து கலர் ஜெராக்ஸ் எடுத்து போலியாக பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும் வழிப்பறி செய்யப்பட்ட செல்போன்களை அயனாவரம் பகுதியை சேர்ந்த தீனதயாளன், அண்ணா நகரை சேர்ந்த சாலமன் ஆகியோரிடம் கொடுத்து வைத்திருந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து போலீசார் தீனதயாளன், சாலமன் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் சாலமன் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமணையில் பிணவரையில் பணிபுரியும் ஊழியர் எனவும் இவர் பணிபுரியும் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பயன்படுத்தக்கூடிய போதை மாத்திரைகளை எடுத்து வந்து இளைஞர்களுக்கு கொடுத்துள்ளார். பின்பு அவர்களை போதைக்கு அடிமையாக்கி அதன் மூலம் இளைஞர்களை திருட்டு வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 6 திருடப்பட்ட செல்போன்கள் வழிப்பறிக்கு பயன் படுத்திய டியோ இருசக்கர வாகனம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக பயன்படுத்தப்படும் அரசு முத்திரையிடப்பட்ட போதை தரக்கூடிய மாத்திரை அட்டைகள் சிலவற்றையும் தனிப்படையினர் கைப்பற்றினர். இவ்வழக்கில் திறமையாக செயல்பட்ட அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையிலான தனிப்படையினரை கமிஷனர் மகேஷ்குமார் அக்ரவால் வெகுவாக பாராட்டினார்.
–––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––

Translate »
error: Content is protected !!