சென்னை சென்ட்ரல் வெடிகுண்டு வழக்கில் தொடர்புடைய நபர் கொள்ளை வழக்கில் கைது.. போலீசார் தீவிர விசாரணை..!

சென்னை சென்ட்ரல் வெடிகுண்டு வழக்கில் தொடர்புடைய நபரை சென்னை பெரியமேடு போலீசார் வழிப்பறிக் கொள்ளை வழக்கில் கைது செய்துள்ளனர்.

சென்னை, பட்டாளம், ஸ்ட்ராங்க்ஸ் ரோட்டில் வசித்து வருபவர் சுராஜி (49 ). சென்னை, சவுகார்பேட்டையில் கடந்த 2 ஆண்டுகளாக ஜெய் ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 5ம் தேதி மாலை 5.30 மணியளவில் ரூ. 7.5 லட்சம் பணம், சுமார் 282 கிராம் தங்க செயின் மற்று தங்கக்கட்டிகள் ஆகியவற்றை தோள் பையில் வைத்துக் கொண்டு தனது ஹோண்டா ஆக்டிவா வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற இரண்டு பேர் சுராஜை கையால் தாக்கி அவர் வைத்திருந்த பணப்பையை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர். அது தொடர்பாக சுராஜ் பெரியமேடு போலீசில் புகார் அளித்தனர். கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில், இணைக்கமிஷனர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர், அதனையடுத்து சென்னை ராயப்பேட்டை, நாயர்வரதப்பிள்ளை தெருவைச் சேர்ந்த சபியுல்லாயாசின் (33) என்பவரைப் பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் சுராஜிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ. 6 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அவருடன் சேர்ந்து இந்த கொள்ளையில் ஈடுபட்ட அவரது கூட்டாளி திருவொற்றியூரைச் சேர்ந்த ரபி () நூர்தீன் () இஸ்மாயில் (37) என்பவர் தலைமறைவாகி விட்டதால் அவரை போலீசார் தேடி வந்தனர். அதனையடுத்து அவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 74.630 கிராம் தங்கம் மற்றும் இருசக்கர வாகனம், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ரபியிடம் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. ரபி மீது சென்னை மாம்பலம், திருவொற்றியூர், சென்னை மத்திய குற்றப்பிரிவு, பெரியபாளையம், சோழவரம், கொடுங்கையூர் மற்றும் சென்னை சிபிசிஐடி காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, கள்ளநோட்டு வழக்குகள் உள்ளன.

மேலும் கடந்த 2014ம் ஆண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்த வழக்கிலும் ரபி முக்கிய குற்றவாளி ஆவார். அது தொடர்பான வழக்கு சென்னை பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. அந்த வழக்கில் ரபி ஆஜராகாததால் அவரை கைது செய்ய கோர்ட் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கைதான ரபியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!