ஜெயலலிதா சமாதியை பெட்ரோல் குண்டு வீசி தகர்ப்பேன்…சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி இளைஞரால் பரபரப்பு

அரசு வேலை வழங்கா விட்டால் ஜெயலலிதா சமாதியை பெட்ரோல் குண்டு வீசி தகர்ப்பேன் என்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி அனுமதிகோரி மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை, மெரீனா, காமராஜர் சாலையில் காவல்துறை டிஜிபி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மயிலாப்பூர் தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள நுழைவாயில் வழியாக பொதுமக்கள் தங்களுடைய மனுக்களை கொடுப்பது வழக்கம். காவல்துறை அதிகாரிகளை சந்திக்க முன் அனுமதி பெற்றால் மட்டுமே போலீசார் உள்ளே செல்ல அனுமதிப்பார்கள்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மயிலாப்பூர் தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள டிஜிபி அலுவலக நுழைவுவாயில் வழியாக மாற்றுத்திறனாளி ஒருவர் நேற்று உள்ளே செல்ல முயன்றார். பாதுகாப்புப்பிரிவு போலீசார் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. முன் அனுமதி உள்ளதா என விசாரித்தனர்.

அவர் முன் அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது. இதனால் உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. டிஜிபியை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அந்த மனுவை வாங்கி படித்த பாதுகாப்பு பிரிவு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

அதில், “தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியை பெட்ரோல் குண்டு வீசி தகர்ப்பேன். அதற்கு காவல்துறை அனுமதி தரவேண்டும். அவ்வாறு ஈடுபடும் என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாதுஎன்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

அது குறித்து போலீசார் மெரீனா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மெரீனா போலீசார் அங்கு விரைந்து வந்து மாற்றுத்திறனாளியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சென்னை கொருக்குப்பேட்டை, பாரதிநகரைச் சேர்ந்த மணிகண்ட பிரசாத் (வயது 27) என்பது தெரிந்தது.

தனக்கு அரசு வேலை கிடைக்ககோரி இவர் தலைமைச் செயலகம், கவர்னர் மாளிகை, கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றில் மனுக்கள் அளித்துள்ளார். ஆனால் இதுவரை அரசு வேலை கிடைக்காததால் மன உளைச்சல் அடைந்த அவர் இதுபோன்ற மனுவை கொடுக்க வந்துள்ளது தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு அவரை மெரீனா போலீசார் திருவல்லிக்கேணி லாக் நகரில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு காவல்துறை சார்பில் அறிவுரை வழங்கி அனுப்பி வைக்கப்பட்டார்.

 

Translate »
error: Content is protected !!