தண்ணீர் லாரி மோதி 4வயது சிறுவன் பலியான சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு

சென்னை, செப். 13–

 

தண்ணீர் லாரி மோதி 4 வயது சிறுவன் பலியான சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பட்டினப்பாக்கத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தண்ணீர் லாரி ஒன்று தாறுமாறாக ரோட்டில் ஓடி சிக்னலில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இதில் தனது தாத்தா, பாட்டியுடன் இருசக்கரவாகனத்தில் சென்ற 4 வயது சிறுவன் பிரனீஷ் என்ற சிறுவன் பரிதாபமாக பலியானான். 3 பேர் இந்த விபத்தில் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பலியான சிறுவன் எண்ணுார் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத்தின் மகன் பிரணீஷ் (4) என்பது தெரியவந்தது. ராஜேந்திர பிரசாத்தின் தாய் உமாவின் மருத்துவ சிகிச்சைக்காக உறவினர் கோபால் என்பவரது இருசக்கர வாகனத்தில் உமா,பிரணீஷ் தரமணி சென்று கொண்டிருந்த போது லாரி மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இந்த விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய லாரி டிரைவர் பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த சமீர் (24) என்பவரை 304 ஏ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாறுமாறாக வந்த லாரி சிக்னல் முன்பு நின்று கொண்டிருந்த 3 பைக்குகள் மீது மோதி விட்டு சிக்னல் கம்பத்தில் மோதுவது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தண்ணீர் லாரி ஓட்டுனர் சங்க தலைவர்களை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு கமிஷனர் தலைமையில் கூட்டம் நடத்தி பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் தண்ணீர் லாரியை தாறுமாறாக ஓட்டி சிறுவனை பலியாக்கிய சம்பவத்தினால் மீண்டும் லாரி உரிமையாளர்களை வரவழைத்து அறிவுரை வழங்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!