சென்னை
சென்னை மண்ணடியில் பிரிண்டிங் பிரஸ் அதிபரை கடத்தி ரூ. 2 கோடி பறித்த வழக்கில் போலி சிம்கார்டு வழங்கிய செல்போன் நிறுவன ஏஜெண்டு உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, பாரிமுனை, மண்ணடியில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வருபவர் திவான் அக்பர். கடந்த மாதம் 17ம் தேதி இவரை மர்ம நபர்கள் கடத்திச் சென்று ரூ. 2 கோடி பணத்தை பறித்துக் கொண்டு விடுவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அக்பர் அளித்த புகாரின் பேரில் முத்தியால் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இந்த கடத்தலில் ஈடுபட்டது சர்வதேச பயங்கரவாதி தவ்பீக் மற்றும் அவரது கூட்டாளிகள் என தெரியவந்தது. அதனையடுத்து கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் வடசென்னை இணைக்கமிஷனர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
அதன்பேரில் போலீசார் தவ்பீக்கின் கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர். ஆனால் தவ்பீக் தப்பிச்சென்று விட்டார். தவ்பீக்கை என்ஐஏ, கியூ பிரிவு அதிகாரிகள் வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த கடத்தல் வழக்கில் தவ்பீக் உள்ளிட்டோர் பயன்படுத்திய சிம்கார்டுகள், போலியான ஆவணங்கள் கொடுத்து பெறப்பட்டவை என தெரியவந்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் போலி ஆசாமிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து சென்னை, புது வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த அர்ஜுன் (31) என்பவரை நேற்று கைது செய்தனர்.
தவ்பீக்
விசாரணையில் அர்ஜுன் தனியார் சிம்கார்டு நிறுவனத்தின் ஏஜெண்டாக இருந்தபடி போலி ஆவணங்கள் மூலம் சிம்கார்டுகளை தவ்பீக் உள்ளிட்ட நபர்களுக்கு வழங்கியது தெரியவந்தது. அர்ஜுணன் அளித்த தகவலின் பேரில் தவ்பீக்கின் கூட்டாளிகள் ராயபுரத்தைச் சேர்ந்த காசிம் நவாஸ் (34), மண்ணடியைச் சேர்ந்த அசன் முகமது (52), பெரம்பூரைச் சேர்ந்த பிரேமநாதன் (31) மற்றும் அமர் ஜெயின் (41) ஆகிய 5 பேரையும் போலீசார் இன்று கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் குற்றவாளிகள் 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.