புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்பட நடிகர் தவசிக்கு சிம்பு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்; இதேபோல், மேலும் பலர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
கிழக்குச் சீமையிலேயே படத்தில் அறிமுகமானர் நடிகர் தவசி; வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் அவருடைய கதாபாத்திரம், அனைவரின் கவனத்தை ஈர்த்தது. அந்த படத்தில், குறி சொல்பவராக தோன்றி, கருப்பன் குசும்பன் என்று பேசும் டயலாக் மிகவும் பிரபலமானது.
இதற்கிடையே, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பணமில்லாமல் தவிக்கும் நடிகர் தவசியில் மெலிந்த தோற்றமுள்ள புகைப்படங்கள், உருக்கமாகப் பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பானது.
இதையடுத்து, மதுரை சரவணா மருத்துவமனை டாக்டரும், எம்.எல்.ஏ.வுமான சரவணன், தவசிக்கு உதவினார். அவரை தொடர்ந்து நடிகர்கள் சூரி, சிவகார்த்திகேயன் நிதி உதவி செய்தனர். நடிகர் விஜய் சேதுபதி ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
இந்நிலையில், நடிகர் சிம்பு தனது தரப்பில், தனது உதவியாளர் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை நடிகர் தவசியிடம் வழங்கினார். இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி தவசிக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், தொலைபேசி மூலம் நடிகர் தவசியிடம் பேசி உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்; தேவைப்படும் உதவிகளை செய்ய, நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.