பெரியகுளம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால், சோத்துப்பாறை அணை நிரம்பி, அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகின்றது. அணை, தனது முழு கொள்ளவை எட்டியாதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள சோத்துபாறை அணை நீர்ப்பிடிப்பு பகுதியில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால், அணையின் நீர்மட்டம் சிறிது சிறிதாக உயர்ந்து வந்த நிலையில் நேற்று காலையில், நீர்வரத்து அதிகரித்து அணையின் மொத்த கொள்ளளவான 126.28 அடியில் 123 அடியை எட்டியது.
மேலும், பகல் நேரத்தில் பெய்த கனமழையால், அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரித்து இரவு 10 மணி அளவில் அணையின் முழு கொள்ளவான 126.28 அடியை எட்டியது. அதை தொடர்ந்து அணைக்கு வரும் நீர் அனைத்தும், அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
சோத்துப்பாறை அணைக்கு நீர் வரத்தானது வினாடிக்கு 90 அடியாக உள்ளது; 90 கன அடி நீரும் அப்படியே வெளியேற்றப்படுகின்றது. இதனால் வராகநதி ஆற்றங்கரையோரம் உள்ள வடகரை, தென்கரை வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை பொதுப்பணித்துறையினர் விடுத்துள்ளனர்.
மேலும் உபரியாக வெளியேற்றப்படும் நீரை பெரியகுளம், பாப்பிரெட்டிகுளம், தாமரைக்குளம் ஆகிய குளங்களில் நீரை தேக்கி வைக்கும் நடவடிக்கையை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அணை நிரம்பியிருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.