தமிழகத்தில் நாளை நிவர் புயல் கரையை கடக்கும் நிலையில், புயலை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே நாளை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயலை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக மற்றும் புதுச்சேரி அரசுகள் எடுத்து வருகின்றன.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, புயல் தொடர்பான ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த பிரதமர், தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் என்று முதல்வரிடம் உறுதி அளித்ததாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, புயல் நிலவரத்தை பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
இதற்கிடையே, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழகம் & புதுவை முதல்வர்களிடம் பேசினேன். சாத்தியமான அனைத்து ஆதரவுகளையும் மத்திய அரசு வழங்கும். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.