கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் நிகழ்ச்சியாக தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் நகராட்சி நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் மருத்துவமனைகளில் மற்றும் சுகாதாரத்துறையினரால் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து பெரியகுளம் சட்மன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் சமையல் அறைக்குச்சென்று கொரோனா நோயாளிகளுக்கு செய்யப்படும் உணவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு தரமான உணவுகள் வழங்க வேண்டும் என்றும் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி உரிய உணவுகளை தரமாக தயாரித்து வழங்க வேண்டும் என்றும் மேலும் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் வசதிகள் குறித்து பெரியகுளம் அரசு மருத்துவமனை இணை இயக்குநரிடம் கேட்டறிந்தார்.
கொரோனா நோயாளிகளுக்கான உரிய சிகிச்சையினை அளித்து உயிரிழப்புகள் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன் பின்னர் சோத்துப்பாறை அணை சென்று ஆய்வு செய்து விட்டு நகராட்சி சுத்திகரிப்பு நிலையம் வந்து அங்கு பெரியகுளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு வழங்கப்படும் நீர் எவ்வாறு சுத்திகரிக்கப்பட்டு செல்கிறது என்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அரசு அதிகாரிகள் மற்றுமு கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.