சென்னை
9,10,11–ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததற்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25–ந்தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. கல்வி தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டன. இந்த நிலையில் ஜனவரி 19–ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கின. இதனையடுத்து 9 மற்றும் 11ம் வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டன. மற்ற வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் சட்டசபையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 9,10,11–ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களின் நலன்கருதியும், உடலும் உள்ளத்தினையும் ஒருசேர ஆய்வுசெய்து மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்து எதையும் முன்னெடுத்து செல்வதில் தமிழ்நாடு முதன்மையாகத் திகழ்கிறது என்றால் அதுமிகையாகாது.
9,10,11ம் வகுப்பு மாணவர்கள் இந்தக் கல்வியாண்டில் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பினை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.