பொதுமக்களை கட்டாய படுத்தி.. கவரிங் நகைகளை தங்க நகைகள் என விற்க முயன்ற பலே திருடர்கள் கைது..

சென்னை

சென்னை, பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதியில் கவரிங்  நகைகளை தங்க நகைகள் என விற்று மோசடியில் ஈடுபட முயன்ற பலே திருடர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, அடையாறு பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதியில் தலப்பாக்கட்டி பிரியாணி கடை அருகில் இரண்டு வாலிபர்கள் தங்க நகைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதாக இது தொடர்பாக அங்குள்ளவர்கள் போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவித்தனர்.

அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையில், அப்போது ரோந்துப்பணியில் இருந்த சாஸ்திரி நகர் எஸ்ஐ முருகன், காவலர் பிரியன் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். நகைகளை வாங்கி பரிசோதனை செய்த போது அவை அனைத்தும் கவரிங் நகைகள் என்று தெரியவந்தது. தங்க நகைகள் என்று பொய் கூறி அவற்றை விற்று வந்துள்ளதை கண்டுபிடித்தனர்.

அவர்களை சாஸ்திரி நகர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த யாகூப் (வயது 23) மற்றும் பெரோஷ் பாஷா (26) என்பதும் தெரியவந்தது. யாகூப் மீது ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பல திருட்டு வழக்குகள் இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து போலி நகைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும் விசாரணைக்குப்பின்னர் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட சாஸ்திரி நகர் எஸ்ஐ முருகன், காவலர் பிரியன் ஆகியோரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் கூடுதல் கமிஷனர் கண்ணன், இணைக்கமிஷனர் லட்சுமி ஆகியோர் வெகுவாக பாராட்டினார்கள்.

Translate »
error: Content is protected !!