போக்குவரத்து விதியை மீறிய வாலிபரை பிடிக்க முயன்ற போது அவரை தள்ளிவிட்டதால் டிராபிக் இன்ஸ்பெக்டருக்கு காலில் இரண்டு தையல்கள் போடப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை, தேனாம்பேட்டை அப்பல்லோ ஆஸ்பத்திரி அண்ணா சாலை சந்திப்பில் நேற்று இரவு 7 மணியளவில் போக்குவரத்து போலீசார் பணியில் இருந்தனர். தேனாம்பேட்டை டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் மயில்சாமி அந்த சிக்னலில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது செனடாப் ரோட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஒரு வழிப்பாதையில் வந்த ஒரு வாலிபர் அண்ணா சாலை நோக்கி செல்ல முயன்றார். அவரை இன்ஸ்பெக்டர் மயில்சாமி தடுத்து நிறுத்தி பிடிக்க முயன்றார்.
ஆனால் அந்த வாலிபர் வாகனத்தை நிறுத்தாமல் இன்ஸ்பெக்டரை இடித்து தள்ளிவிட்டு வேகமாக சென்று விட்டார். வாலிபர் இடித்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்த இன்ஸ்பெக்டருக்கு வலதுகாலில் பலத்த அடிபட்டது. ரத்தம் வடிந்த நிலையில் அவர் அங்கிருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். டாக்டர்கள் அவருக்கு காலில் இரண்டு தையல்கள் போட்டு சிகிச்சை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமரா பழுதடைந்ததால் இன்ஸ்பெக்டர் மீது மோதிச்சென்ற நபர் யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.