கொரோனாவில் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் மனைவி கமிஷனரிடம் மனு?

சென்னை,

போலீஸ் குடியிருப்பில் தொடர்ந்து வசிக்க அனுமதி தரக்கோரி கொரோனாவால் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பாலமுரளியின் மனைவி முதல்வர் மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

சென்னை, மாம்பலம், சட்டம்ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் பாலமுரளி. கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்றால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். பாலமுரளி வடபழனியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.

பாலமுரளி உயிரிழந்த நிலையில் அவரது மனைவி கவிதா (வயது 40) தனது குழந்தைகளுடன் அங்கு வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு கடிதம் மூலம் மனு அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘‘எனது கணவர் பாலமுரளி மாம்பலம் போலீசில் சட்டம், ஒழுங்கு பிரிவில் காவல் ஆய்வாளராக பணி செய்து வந்தபோது, கொரனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டார். பின்பு அவர் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தவர் கடந்த கடந்த ஆண்டு ஜுன் மாதம் 17ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

எங்களுக்கு ஹர்சவர்தினி (வயது 17) என்ற மகளும், நிஷாந்த் என்ற (13 வயது) மகனும் உள்ளனர். ஹர்சவர்தினி 12ம் வகுப்பும், நிஷாந்த் 8ம் வகுப்பும் படித்து வருகின்றனர். எனது கணவர் இறந்ததால், எனக்கு பென்ஷன் வகையில் பணம் ரூ 40 ஆயிரம் அரசிடமிருந்து கிடைக்கிறது.

தற்போது நாங்கள் வசிக்கும் காவலர் குடியிருப்பை காலி செய்ய நிர்பந்திக்கும் சூழ்நிலையில், நாங்கள் இங்கிருந்து காலி செய்தால் வெளியில் வீட்டு வாடகையாக மட்டுமே பணம் ரூ 20 ஆயிரம்வரை செலுத்த வேண்டியிருக்கும். மீதமுள்ள பணத்தில் சாப்பாடு மற்றும் குழந்தைகளின் படிப்பு செலவைக் கவனிக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

மேலும் எனது கணவரை இழந்த நிலையில் வெளியில் வாடகைக்கு சென்றால் கணவரை இழந்த எனக்கும் எனது குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. எனவே எனது மகன், மகள் படிப்பு காலம் முடிவடைந்த பின்னர் 8 ஆண்டு காலம் நாங்கள் தற்போது வசிக்கும் அதே வீட்டில் வசிக்க ஆவண செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்’’ இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!