மக்கள் நீதி மய்யம் கட்சி 154 தொகுதிகளில் போட்டி… சமக, ஐஜேகே கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு..

சென்னை,

சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு. மக்கள் நீதி மய்யம் கட்சி 154 தொகுதிகளில் போட்டி. மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் குமரவேலு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் ஐஜேகே சார்பில் ரவி பச்சமுத்து ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக ஆகிய கட்சிகளுக்கிடையே 5 முனை போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து சரத்குமாரும் திமுக கூட்டணியிலிருந்து ஐஜேகே ரவி பச்சமுத்துவும் விலகினார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருவரும் இணைந்து ஒரு கூட்டணியை அறிவித்தார்கள்.

இந்த நிலையில் சரத்குமாரும் ரவி பச்சமுத்துவும் இணைந்து மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சரத்குமாரும், கமல்ஹாசனும் தனித்தனியே முதல்வர் வேட்பாளர் என கூறி வந்ததால் குழப்பம் நிலவியது.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம்- ஐஜேகே- சமக கட்சியிடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் சென்னை வடபழனியில் கையெழுத்தானது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் சி கே குமரவேல் முன்னிலையில் கையெழுத்தானது.

ஐஜேகே, சமத்துவ மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 154 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என அறிவித்துள்ளது. இதன் மூலம் கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த தொகுதி உடன்பாடு இவர்களிடையே நள்ளிரவு எட்டப்பட்டுவிட்டது.

 

 

Translate »
error: Content is protected !!