மாம்பலம் கடலை வியாபாரி கொலை வழக்கில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 4 பேர் கைது

சென்னை மாம்பலத்தில் வேர்க்கடலை வியாபாரி கொலை வழக்கில் 3 சிறுவர்கள் உள்பட மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, சைதாப்பேட்டை, ஜோதியம்மாள் நகர், நரிக்குறவர் பள்ளி அருகில் வசித்து வந்தவர் ராமமூர்த்தி (எ) நாராயணமூர்த்தி (வயது 40). வேர்க்கடலை வியாபாரம் செய்து வந்தார். கடந்த 13ம் தேதியன்று இரவு தி.நகர், நியு போக் ரோட்டில் உள்ள தண்ணீர் தொட்டி அருகில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அது தொடர்பாக மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தியதில் குடிபோதையில் அவரது நண்பர்கள் அதனை செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக சைதாப்பேட்டை நியூகாலனியைச் சேர்ந்த கருப்பு நாகு (எ) நாகராஜ் (40), திநகரைச் சேர்ந்த காமேஷ் (20), சரவணன் (23), பாலசுப்ரமணியன் (20), ஹரி (எ) ஹரிஹரன் (20) ஆகிய 5 பேரை 14ம் தேதியன்று கைது செய்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட நாராயணமூர்த்தியும் கொலையாளி கருப்பு நாகுவும் சுமார் 30 ஆண்டுகால நண்பர்கள் எனவும் சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்துள்ளனர் என தெரியவந்தது. நாராயணமூர்த்தி மீது இருந்த ஆத்திரத்தில் கருப்பு நாகு தனது நண்பர்களுடன் சேர்ந்து ராமமூர்த்தியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த 13ம் தேதி அவரை மது அருந்த அழைத்து தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சைதாப்பேட்டையைச் சேர்ந்த ரவி (25), மற்றும் 3 சிறுவர்கள் நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் மூவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். ரவி புழல் மத்திய சிறையிலும், 3 சிறுவர்கள் அரசு கூர்நோக்கு இல்லத்திலும் சேர்க்கப்பட்டனர்.

Translate »
error: Content is protected !!