சென்னை, செங்குன்றம் பகுதியில் சட்ட விரோதமாக காரில் டாஸ்மாக் சரக்குகளை கடத்தி வந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 160 குவாட்டர் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் போதை பொருட்கள் வைத்திருப்பவர்கள், சட்டவிரோதமாக டாஸ்மாக் சரக்கு பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்பேரில் காவல் ஆய்வாளர்கள், தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
மேலும், முழுஊரடங்கையொட்டி சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை செங்குன்றம் இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில், செங்குன்றம், ஆலமரம் சந்திப்பு அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வேகமாக வந்த மாருதி ஸ்விப்ட் காரை நிறுத்தி விசாரணை செய்தனர். காரை ஓட்டி வந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகத்தின்பேரில், காரை சோதனை செய்தனர். அப்போது காருக்குள் மதுபாட்டில்கள் பெருமளவு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், சட்டவிரோதமாக காரில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த செங்குன்றம் பவானி நகரைச் சேர்ந்த இளமாறன் (34) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து காரில் கடத்தி வந்த 180 மி.லி. அளவு கொண்ட 160 மதுபாட்டில்கள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளி இளமாறன் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.