மு.க.ஸ்டாலின் – அழகிரி சந்திப்பு மதுரையில் நடக்காதது ஏன்?

மதுரைக்கு சென்றிருந்த முதல்வர் ஸ்டாலினை, தன் வீட்டிற்கு வரும்படி, அவரது அண்ணன் அழகிரி அழைப்பு விடுக்காததாலும், கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டு இருப்பதாலும், இருவரின் சந்திப்பு கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக மதுரைக்கு ஸ்டாலின் சென்றார்.

அதனால் மதுரை, சத்யசாய் நகர் இல்லத்தில், தன் அண்ணன் அழகிரியை சந்திப்பார் என்ற தகவல் வெளியானது. அதாவது, நேற்று முன்தினம் இரவே மதுரை சென்ற ஸ்டாலின், அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தார். முதல்வர் என்ற அடிப்படையில், தன்னை அழகிரி மரியாதை நிமித்தமாக சந்திக்க வருவார் என்றும், வீட்டிற்கு வரும்படி அழைப்பு விடுப்பார் என்றும், ஸ்டாலின் தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஸ்டாலினை சந்திக்க அழகிரி வரவில்லை. இருவரும் தொலைபேசியிலும் பேசிக் கொள்ளவில்லை. அண்ணனோ, ‘தம்பி வரட்டுமேஎன இருந்ததாகவும், தம்பியோ, ‘அண்ணன் அழைக்கட்டுமேஎன, இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அரசு பணிகள் தொடர்பான ஆய்வுகளை முடித்து, அழகிரி வீட்டிற்கு செல்லாமல், திருச்சிக்கு சென்று விட்டார் ஸ்டாலின். இது தொடர்பாக, அழகிரி அளித்த பேட்டியில், “முதல்வர் ஸ்டாலின், என் இல்லத்திற்கு வருவதாக, எனக்கு எந்த தகவலும் வரவில்லை. அண்ணன் வீட்டுக்கு தம்பி வருவது இயல்பானது தான். ஸ்டாலின், என் இல்லத்திற்கு வந்தால் வரவேற்பேன்,” என்றார்.

கட்சி வட்டாரங்கள் கூறியதாவது, அழகிரி, தி.மு..,வில் இருந்து நீக்கப்பட்டவர். அவரை கட்சியில் சேர்க்க வேண்டும் என்றால், உயர்நிலை செயல் திட்டக் குழுவில் விவாதித்து, முடிவு எடுக்க வேண்டும். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் வீட்டுக்கு, கட்சி தலைவரே செல்வது விமர்சனமாகி விடும். ஆனால் அண்ணன் என்ற உறவு முறையில், அழகிரி அழைப்பு விடுத்திருந்தால், ஸ்டாலின் சென்றிருக்கலாம். மேலும், அரசு பணிக்காக சென்ற இடத்தில், தன் சொந்த விஷயத்திற்கு முக்கியத்துவம் தர, முதல்வர் விரும்பவில்லை. இந்த காரணங்களால் தான், இருவரின் சந்திப்பு நிகழாமல் போனது. இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.

Translate »
error: Content is protected !!