வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் சாலைகளில் கொட்டப்படும் குப்பைகளால் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்குட்பட்ட வால்பாறை நகரத்தில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களும் உள்ளன. இங்கு உள்ள கழிவுகள் வால்பாறை நகராட்சி மூலம் சேகரிக்கப்பட்டு குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படுகின்றன.
வால்பாறை சோலையார் அணைச்சாலையில் வால்பாறை நகராட்சிக்கு குப்பைக் கிடங்குகள் உள்ளன. குப்பைக் கிடங்கு அருகில் அரசு கல்லூரி, நீதிமன்ற வளாகம், வாகன நிறுத்துமிடம், சிறுவர் பூங்கா மற்றும் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தநிலையில், நகராட்சி ஊழியர்கள் வால்பாறை நகரில் சேகரமாகும் குப்பைகளை வாகனம் நிறுத்தும் இடம் அருகில் சாலையிலேயே கொட்டிச் செல்கின்றனர்.
இதன் காரணமாக இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகின்றது. மேலும், சாலையில் செல்வோர்க்கும் அருகில் குடியிருக்கும் மக்களுக்கும் இதனால், நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சாலையில் கொட்டப்படும் இறைச்சி, கோழி கழிவுகளால் ஈர்க்கப்படும் சிறுத்தை புலிகள், செந்நாய்கள் இரவில் இப்பகுதியில் நடமாடுகின்றன. இதன் காரணமாக மனித வன உயிரின மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் குப்பைக் கழிவுகளை பாதுகாப்பான இடத்தில் கொட்ட நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.