வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அவரது நடவடிக்கைக்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த 6 நாட்களாக வட மாநில விவசாயிகள் போராடி வருகின்றனர். போலீசாரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி சென்ற வண்ணம் உள்ளது.
பிரம்மாண்ட அளவில் நடைபெறும் இந்த போராட்டம், இந்திய அளவில் மட்டுமின்றி உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. விவசாயிகள், ஆறு மாதங்களுக்கு தேவையான பொருட்களுடன் வந்து, கோரிக்கை நிறைவேறும் வரை டெல்லியிலேயே இருக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், விவசாயிகளின் டெல்லி சாலோ போராட்டத்திற்கு, கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ ஆதரவு தெரிவித்துள்ளார். காணொலி வாயிலாக குருநானக் ஜெயந்தி வாழ்த்துகளை தெரிவித்த போது, விவசாயிகள் போராட்டம் குறித்தும் தனது கருத்தை அவர் வெளியிட்டார்.
கனடா பிரதமர் கூறுகையில், விவசாயிகளின் எதிர்ப்புக்கள் குறித்து இந்தியாவில் இருந்து வெளிவரும் செய்திகளை பற்றி குறிப்பிடாமல் என் பேச்சைத் தொடங்கினால் அது பொறுப்பானதாக இருக்காது.
இந்தியாவில் உள்ள நிலைமை கவலை அளிக்கிறது. உரிமைகளைப் பாதுகாக்க நடைபெறும் அமைதியான போராட்டத்திற்குக் கனடா எப்போதும் ஆதரவளிக்கும் என்ரு கூறினார்.
இதற்கிடையே, விவசாயிகள் போராட்டம் தொடர்பான கனடா பிரதமரின் கருத்துக்கு இந்தியா ஆட்சேபம் தெரிவித்துள்ளது. ‘எங்களது உள்நாட்டு விவகாரத்தில் கனடா பிரதமர் கருத்துகூறுவது தேவையற்றது’ என்று, இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.