அரசியல் கட்சி தலைவா்கள் வானில் பறந்துபறந்து பிரசாரம் செய்வதால்,சென்னை பழைய விமானநிலையம் தனிவிமானங்கள்,ஹெலிகாப்டா்கள் வருகையால் களைகட்ட தொடங்கியுள்ளது.
மக்கள் நீதி மய்யம் தலைவா் நடிகா் கமல்ஹாசன் காஞ்சிபுரத்திலிருந்து இன்று காலை 11.30 மணிக்கு ஹெலிகாப்டரில் சென்னை பழைய விமானநிலையம் வந்தாா்.அதன்பின்பு சென்னை பழைய விமானநிலையத்திலிருந்து பகல் 12 மணிக்கு தனி விமானத்தில் கோவைக்கு புறப்பட்டு சென்றாா்.
அதைப்போல் திமுக தலைவா் ஸ்டாலின் இன்று பகலில் கொளத்தூரில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு,பிற்பகல் சென்னை பழைய விமானநிலையத்திலிருந்து தனி விமானத்தில் திருச்சி புறப்பட்டு செல்கிறாா்.மாலை 5 மணிக்கு திருவாரூரிலிருந்து தோ்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறாா்.
பிரதமா் மோடி ஏற்கனவே தனிவிமானத்தில் சென்னை வந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரிக்கும்,தனி விமானத்தில் கோவைக்கும் சென்றாா்.மத்திய உள்துறை அமைச்சா் அமீத்ஷா ஏற்கனவே சென்னையிலிருந்து ஹெலிகாப்டரில் காரைக்கால்,விழுப்புரம் போன்ற இடங்களுக்கு சென்று தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.
அதைப்போல் காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி தனி விமானத்தில் சென்னை வந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரி சென்று பிரசாரம் செய்தாா்.மேலும் மத்திய உள்துறை இணை அமைச்சா் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் பிரசாரம் செய்துவிட்டு தனி விமானத்தில் சென்னை வந்து,அதிமுகவுடன் நடந்த கூட்டணி சம்பந்தமான பேச்சுவாா்த்தையில் கலந்து கொண்டாா்.
இதைப்போல் அரசயல் கட்சி தலைவா்கள் பறந்து,பறந்து தோ்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளதால்,சென்னை பழைய விமானநிலையத்தில் தனி விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டா்கள் சேவைகள் அதிகரித்துள்ளன.இதனால் சென்னை பழைய விமானநிலையம் விஐபிகள் விமான நிலையமாகி களைகட்ட தொடங்கியுள்ளது.