அரசு ஊழியர்களுக்கு அடித்தது யோகம்! தீபாவளி போனஸ் அறிவிப்பு…

பண்டிகை காலத்தை ஒட்டி, மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், இத்தகவலை வெளியிட்டார்.

கோவிட் தொற்று பரவல், அதை தொடர்ந்து பல மாதங்களாக அமலில் இருந்து வந்த ஊரடங்கு உத்தரவால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி வெகுவாக பாதித்தது. வேலையின்மை, பணப்புழக்கம் குறைந்ததோடு, ஏழை மக்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

இச்சூழலில் கோவிட் ஊரடங்கு பல கட்டங்களாக தளர்த்தப்பட்டு, தற்போது இயல்பு வாழ்க்கை ஓரளவு திரும்பியுள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள், மெல்ல மெல்ல இயல்புக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. பண்டிகை காலம் என்பதால் கடைகளில் வர்த்தகம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது.

நுகர்வோர் செலவு செய்யும் அளவை அதிகரித்தால்தான் பொருளாதார வளர்ச்சி தூண்டப்படும் என்பதை அறிந்து மத்திய அரசு, சமீபத்தில் பண்டிகை கால முன்பணத்தை மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்தது.

அதன்படி அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் பண்டிகை கால முன்பணமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். அந்த தொகை, ரூ.1000 வீதம் 10 மாதங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இச்சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களிடம் கூறுகையில், “மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. விஜய தசமிக்கு முன் ஒரே தவணையாக போனஸ் வழங்கப்படும்.

போனஸ் வழங்குவதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.3,737 கோடி செலவு ஏற்படும். இதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்” என்றார்.

Translate »
error: Content is protected !!