அரியலுாரில் உள்ள பழங்கால கோவிலில் சாமி சிலைகள் காணாமல் போனது தொடர்பாக 18 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், சுள்ளங்குடியில் அருள்மிகு பாலாம்பிகை சமேத கைலாச நாதர் திருக்கோயில் உள்ளது. இந்த கோவில் பல 100 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். கடந்த 2002-ம் ஆண்டுக்கு முன்பு இரவு நேரத்தில் கோவிலுக்குள் இருந்த விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை அம்மன், சந்திரன், சண்டீகேஸ்வரர், பாலாம்பிகை, அப்பர், மகாவிஷ்ணு , கஜலெட்சுமி, பைரவர் ஆகிய 12 கற்சிலைகள் திடீரென காணாமல் போயின.
இதுதொடர்பாக தற்போது கோவில் பொறுப்பு செயல் அலுவலர் ரமேஷ் என்பவர் சிலைத்திருட்டு தடுப்புப்பிரிவு டிஎஸ்பியிடம் புகார் அளித்துள்ளார். அது தொடர்பாக சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங், ஐஜி அன்பு மற்றும் எஸ்பி சக்திவேல் மேற்பார்வையில் அரியலுார் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த 7 சிலைகள் காணாமல் போனது தொடர்பாக 2002ம் ஆண்டுக்கு முன்பு பொறுப்பில் இருந்த கோவில் நிர்வாகிகளோ, அறங்காவலரோ புகார் அளிக்கவில்லை என தெரியவந்தது.
அதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் 457 (2) (சிலைகளை கடத்துதல்), 380 (2) (திருடுதல்) சட்டபிரிவுகளின் படி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் டிஎஸ்பி கதிரவன் புலன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அறிவித்துள்ளது.