சட்டசபை அ.தி.மு.க., தலைவர் பதவியை கைப்பற்றுவதில், முன்னாள் முதல்வர் பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வம், இடையே இழுபறி நீடிக்கிறது. இந்த விவகாரத்தில், சமரசம் ஏற்படுமா அல்லது இரட்டை தலைமை உடையுமா என்ற கேள்வி எழுந்துஉள்ளது.
சட்டசபை அ.தி.மு.க., தலைவராக தேர்வு செய்யப்படுபவரே, சட்டசபையின் பிரதான எதிர்க்கட்சி தலைவராக இருப்பார். அவருக்கு, சட்டசபை வளாகத்தில் தனி அறை, உதவியாளர் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும்.
மோதல்
தற்போது, அ.தி.மு.க.,வில், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி., என, இரட்டைத் தலைமை உள்ளது. இதனால், ஏற்கனவே நடந்த, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், சட்டசபை அ.தி.மு.க., தலைவர் பதவிக்கு, இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது.
பன்னீர்செல்வம்., அந்த கூட்டத்தில், ‘சசிகலாவை அ.தி.மு.க.,வில் இணைக்க வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்லியும், அதை நீங்கள் புறக்கணித்ததாலும், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதாலும், ஆட்சியை இழக்க வேண்டியதாயிற்று. இனிமேலாவது, சசிகலாவை சேர்க்க வேண்டும்‘ என்றார். அதற்கு கொங்கு மண்டல எம்.எல்.ஏ.,க்கள் சிலர், ‘சசிகலாவை சேர்த்தால், நாங்கள் கட்சியிலிருந்து வெளியேறுவோம்‘ என, மிரட்டினர்.
பன்னீர்செல்வம்., ‘முதல்வர் பதவிக்கு, உங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்கிற போது, நீங்கள் எதிர்க்கட்சி தலைவர் பதவி கேட்டு, கட்சியில் சர்வாதிகாரியாக செயல்படாதீர்கள்‘ என்று, பழனிசாமியை பார்த்துக் கூறினார். அதற்கு துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ‘கட்சியின் நன்மைக்காக, நீங்கள் விட்டுக் கொடுக்க வேண்டும்‘ என்று, பன்னீர்செல்வத்திடம் கூறினார்.
இந்தக் கூட்டத்தில், இரு தரப்பினரிடமும் ஒருமித்த கருத்த ஏற்படவில்லை. மீண்டும் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று கூடும் என, கட்சித் தலைமை அலுவலகம் அறிவித்தது. இது குறித்து, அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
‘ஸ்டாலின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில், நாம் இருவரும் பங்கேற்கலாம்; வாருங்கள்‘ என, பழனிசாமிக்கு, பன்னீர்செல்வம்., அழைப்பு விடுத்தார். ஆனால், பழனிசாமி., ‘நாம் இருவரும் பங்கேற்க வேண்டாம்; நவநீதகிருஷ்ணனை அனுப்பி வைக்கலாம்‘ என்றார். ஆனால், எந்த பதிலும் தெரிவிக்காமல், பன்னீர்செல்வம்., மட்டும் பங்கேற்றார்.
இரு அணிகள்
ஸ்டாலினுக்கு முதல் நபராக, பன்னீ்ர்செல்வம்., வாழ்த்து தெரிவிப்பதும், முதல்வர் ஸ்டாலினுடன் நெருக்கமாக இருப்பதும், தி.மு.க., எதிர்ப்பு அரசியல் செய்ய முடியாத சூழ்நிலையை உருவாக்கி விடுமோ என, பழனிசாமி., கருதுகிறார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை, தனக்கு விட்டுக் கொடுத்தால், எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க தயார் என, பழனிசாமி., தரப்பினர் பேச்சு நடத்தினர்.
அதற்கு,பன்னீ்ர்செல்வம்., சம்மதிக்கவில்லை. ஒருங்கிணைப்பாளர் தான், எதிர்க்கட்சி தலைவராகவும் இருக்க வேண்டும் என, அவர் பிடிவாதம் பிடித்து வருகிறார். இரு தரப்பினரிடமும் சமரசம் ஏற்படாமல், இழுபறி நீடிக்கிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், போலீசாரிடம் அனுமதி பெற்று நடத்துகிற, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், இரு தரப்பினரும் விட்டுக் கொடுத்தாக வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டு உள்ளது. எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், இரு தரப்பினரும் விட்டுக் கொடுக்கவில்லை என்றால், சட்டசபையில், அ.தி.மு.க., இரு அணிகளாக செயல்படும் சூழ்நிலையும் உருவாகி விடும். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.