ஆன்லைன் மோசடியில் பறிபோகும் பணத்தை 24 மணி நேரத்துக்குள் மீட்டுக்கொடுக்கும் சைபர்கிரைம் போலீசார்

ஆன்லைன் மோசடி மூலம் பறிபோகும் பணத்தை சென்னை நகர சைபர்கிரைம் போலீசார் புகார் அளித்த 24 மணி நேரத்தில் மீட்டுக்கொடுக்கின்றனர். ஒரே மாதத்தில் 100 புகார்களுக்கு தீர்வு அளிக்கப்பட்டு ரூ. 10 லட்சத்துக்கும் மேல் பணம் திரும்ப பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக சைபர்கிரைம் காவல்துறை தெரிவித்துள்ளது.

சைபர்கிரைம் குற்றங்களை களைவதற்காக கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சென்னை நகர காவல்துறையில் சைபர்கிரைம் பிரிவு மேலும் கடந்த மாதம் முதல் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை கமிஷனர் அலுவலகம் மட்டுமின்றி சென்னை நகரில் 12 காவல் மாவட்டங்களிலும் அந்தந்த துணைக்கமிஷனர் அலுவலகங்களில் சைபர்கிரைம் பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. துணைக்கமிஷனர்களின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த சைபர்கிரைம் பிரிவுகளுக்கு வரும் புகார்கள் அவ்வப்போது களையப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

ஏடிஎம் கார்டின் ரகசிய எண் மற்றும் டேட்டா விவரங்களை ஸ்கிம்மர் கருவி மூலம் பதிவு செய்து அதன் மூலம் போலி ஏடிஎம் கார்டுகளை தயாரிக்கின்றனர். அதனைப்பயன்படுத்தி ஏடிஎம்முக்கு சென்று பணத்தை அபேஸ் செய்கின்றனர். மேலும் வங்கி மேலாளர் போல பேசி ஆதார் எண், ஏடிஎம் கார்டின் 16 இலக்க எண்களையும் கறந்து அதனை ஆன்லைன் பரிவர்த்தனை ஓடிபி எண்ணை பயன்படுத்தி வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை அபேஸ் செய்து விடுகின்றனர். இனி இது போன்று பணத்தை இழந்தால் பொதுமக்கள் கவலைப்படவேண்டாம். பணம் பறிபோன 24 மணி நேரத்துக்குள் அந்த சரகத்தில் உள்ள துணைக்கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர்கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் உடனடியாக பணத்தை வங்கிகள் மூலம் சைபர்கிரைம் காவல்துறையினர் அந்த பணத்தை திரும்பப் பெற்றுக் கொடுக்கின்றனர். அந்த வகையில் சைபர்கிரைம் பிரிவு தொடங்கப்பட்ட ஓரிரு மாதங்களில் பல லட்சம் மதிப்பிலான பொதுமக்களின் பணம் மீட்டுக்கொடுக்கப்பட்டுள்ளதாக சென்னை நகர காவல்துறை தெரிவித்துள்ளது.

அது தொடர்பாக சைபர்கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னை நகரில் துணைக்கமிஷனர் அலுவலகங்களில் கடந்த மாதம் சைபர்கிரைம் தனிப்பிரிவு தொடங்கப்பட்டது. ஆன்லைன் பண மோசடி தொடர்பாக இதுவரை சுமார் 720 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 100 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு சென்னை மயிலாப்பூர், புளியந்தோப்பு, அண்ணாநகர் காவல் மாவட்டங்கள் உள்பட மொத்தம் ரூ. 10 லட்சத்துக்கும் மேல் பணம் வங்கிகளில் இருந்து பெறப்பட்டு புகார்தாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!