ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கப்படும்: முதல்வர் பழனிச்சாமி கோவையில் பேட்டி

ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி விளையாட்டுகளுக்கு தடை விதித்து, அதை நடத்துபவர்கள் கைது செய்யப்படுவர் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நாளை நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, முதல்வர் பழனிச்சாமி விமானம் மூலமாக இன்று கோவை வந்தடைந்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி:

அதிமுக அரசு கோவைக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி உள்ளது. காந்திபுரம் இரண்டடுக்கு மேம்பாலம் 3 கிமீ தொலைவுக்கு ரூ.214 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளது.

உக்கடம் மேம்பாலம் ரூ.120 கோடி மதிப்பில் 2 கிமீ பணிகள் நடைபெறுகிறது. அவினாசி சாலை உயர் மட்ட மேம்பாலமானது 9 கி.மீ நீளத்திற்கு ரூ.1100 கோடி மதிப்பில் விரைவில் பணி துவங்கும்.

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கை வந்திருக்கிறது. இந்த இணையவழி சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அரசு இதை கவனத்தில் கருதி, தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

பொதுமக்கள் நன்மை கருதி இவ்வாறு பணம் வைத்து நடத்தப்படும் அனைத்து ஆன்லைன் சூதாட்டமும் தடை செய்ய அதிமுக அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவரை குற்றவாளிகளாக கருதி கைது செய்ய சட்ட திருத்தத்தை துரிதமாக அரசு மேற்கொள்ளும்.

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. எனவே இங்கு யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். எனவே, நடிகர் விஜய் கட்சி தொடங்க உரிமை உள்ளது. அது அவருடைய உரிமை.

மாணவர்கள் கல்வி பாதிப்பதால் பள்ளி கல்லூரிகளை திறக்க நிர்வாகத்தினரும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்தனர். கொரோனா குறைந்த சூழலில்தான் முடிவை அறிவித்தோம். இப்போது, பள்ளிகள் திறந்தால் கொரோனா பாதிக்கும் என்று கூறுகின்றனர். இதையும் அரசு கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!