உத்தமபாளையம் அரசு கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகி உள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் வாங்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
உத்தமபாளையம் அதனை சுற்றியுள்ள பகுதியில் நெற்பயிர் விவசாயம் அதிகளவில் செய்யப்படுகிறது. அவ்வாறு உற்பத்தியாகும் நெல்லுக்கு விலை கிடைக்கும் வகையில் தமிழக அரசு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக நேரடிக் கொள்முதல் நிலையம் அமைத்துள்ளது.
அதன்படி, உத்தமபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக நேரடிக் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. தற்போது, உத்தமபாளையம் அதனை சுற்றியுள்ள பகுதியில் முதல் போக அறுவடைப்பணிகள் நடைபெறுகிறது.
இதனை அடுத்து ஏராளமான விவசாயிகள் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் வைத்துள்ளனர். தனியாருக்கு சொந்தமான இடத்தில் போதுமான இடவசதியின்றி கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வசதியில்லாத காரணத்தால் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகி வருகிறது. தவிர, திறந்த வெளி என்பதால் நெல் மூடைகள் எலிகளால் சேதமாகிவருகிறது.
எனவே, உத்தமபாளையம் பகுதியில் ஆண்டு தோரும் நெல் விவசாயம் நடைபெறுவதால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க நிரந்தரமான இடத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.