திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியை அடுத்த வெங்கங்குடி பகுதியைச் சோ்ந்தவா் சத்யா (32). இவருடைய கணவா் ராஜேஷ்குமார் (34). இவா்களுக்கு லினதா(10) என்ற பெண் குழந்தை உள்ளது.
கடந்த, 2009ஆம் ஆண்டு இவா்களுக்குத் திருமணம் ஆன நிலையில், கடந்த 3 மாதத்திற்கு முன்பு கணவா் ராஜேஷ்குமாருக்கு, அவருடைய உறவுக்கார பெண்ணான ரேவதியுடன் திருமணம் நடந்ததாக அறிந்த சத்யா, இதுகுறித்து தன் கணவரின் குடும்பத்தாரிடம் முறையிட்டுள்ளார்.
மேலும். தன்னுடைய கணவருக்கு ரேவதியுடன் திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகியுள்ளதும் அவா்களுக்கு பிறந்த குழந்தை இறந்துள்ளதாகவும் வந்த தகவலால் அதிர்ச்சியடைந்த சத்யா, தன்னுடைய கணவரிடம் முறையிட்டுள்ளார்.
இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ராஜேஷ் சத்யாவை தாக்கிவிட்டு சென்றுள்ளார். இந்தப் பிரச்சனை தொடர்பாக மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்திலும், காவல்துறை கண்காணிப்பாளா் அலுவலகத்திலும் சத்யா புகார் கொடுத்துள்ளார்.
ராஜேஷ் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினா் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டனா். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
இதுகுறித்து, நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு, புகார் கொடுக்க பெண் குழந்தையுடன் வந்த சத்யா கூறுகையில், “திமுக சோ்மேன் இளங்கோவன் என்பவரை கையில் வைத்துக்கொண்டு மாமனார் ராஜேந்திரன் மற்றும் அவரது உறவினா்கள் தன்னை மிரட்டி வருவதால், தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
எனவே, எனக்குப் பாதுகாப்புத் தர வேண்டும். என்னுடைய கணவரை மீட்டுத் தர வேண்டும்” என்றார். தோ்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், பொதுமக்களின் மனுக்கள் நேரடியாக மாவட்ட ஆட்சியா் மூலம் பெறப்படாமல், அங்கு வைக்கப்பட்டுள்ள புகார்ப் பெட்டியில் போடப்பட்டு வருகிறது. மேலும், இதுதொடர்பாக இன்று டி.ஐ.ஜியிடமும் மனு அளித்துள்ளார் சத்யா