சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணியிடம் ரூ. 20.98 லட்சம் ஹவாலா பணமா என போலீசார் விசாரணை.,
சென்னை,
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆந்திராவில் இருந்து வந்த பயணியிடம் கணக்கில் வராத ரூ. 20.98 லட்சம் பணத்தை ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை நகரில் தேர்தல் பறக்கும்படையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு கணக்கில் வராத ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
சட்டம், ஒழுங்கு போலீசார் மட்டுமின்றி ரயில்வே பாதுகாப்புப் படையினரும் தேர்தல் பறக்கும் படையினருடன் இணைந்து சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் பயணிகளிடம் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று மதியம் 1 மணியளவில் ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து பினாக்கினி கோவிட்19 சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளை ரயில்வே பாதுகாப்புப்படை அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் வீரேந்திரசிங், எஸ்ஐ விக்கி தலைமையில் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த ரயிலில் சி2 கோச்சில் வந்த ஹர்ஷன்ராம் (வயது 32) என்ற பயணியின் சூட்கேசை திறந்து சோதனையிட்ட போது உள்ளே கத்தை கத்தையாக கரன்சி நோட்டுக்கள் இருந்தன. அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் போலீசார் அவரிடம் இருந்து மொத்தம் ரூ. 20 லட்சத்து 98 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
அதனை அவர் வியாபார ரீதியாக ஆந்திரா மாநிலம் நெல்லுாரில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தார். அந்த பணத்தை ரயில்வே பாதுகாப்புப்படையினர் தேர்தல் பறக்கும்படை அதிகாரி ஜனார்த்தன் வசம் ஒப்படைத்தனர். அந்த பணம் ஹவாலா பணமா என்பது குறித்து பறக்கும்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.