பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74 வயது) உடல்நலக்குறைவால் காலமானார்.கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (25/09/2020) மதியம் 01.04 மணிக்கு உயிரிழந்தார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவால் திரையுலகினரும், ரசிகர்களும் கண்ணீரில் மூழ்கினர்.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி.பி. உடல் நாளை (26/09/2020) அடக்கம் செய்யப்படும் என்று எஸ்.பி.பி.யின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக எஸ்.பி.பி. உடல் வைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.எஸ்.பி.பி.யின் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.