கோவை,
ஐக்கிய அரபு நாடுகளில் நாளை முதல் 10 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
இதனால் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் இயக்கப்படும் விமானங்களில் பயணிகளுக்கு அனுமதி கிடையாது. கார்கோவுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏர்போர்ட் வட்டாரங்கள் கூறுகையில், “கொரோனா நோய் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஐக்கிய அரபு நாடுகளில், நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. விமானங்கள் இயக்கம் தொடர்பாக இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு இயக்கப்படும் விமானத்தில் பயணிகள் ஏற்றிச்செல்ல அனுமதி கிடையாது.
ஆனால், வழக்கம்போல் கார்கோ கொண்டு செல்லப்படும். மறுபுறம் ஷார்ஜாவில் இருந்து மட்டும் கோவைக்கு இயக்கப்படும் விமானத்தில் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும். இந்த நடைமுறை மே 3 வரை தொடரும். அதன்பின் விமானசேவை வழக்கம்போல் இயக்கப்படுமா என்பது மீண்டும் அந்நாட்டு அரசு வெளியிடும் அறிவிப்புக்கு பின் மட்டுமே தெரிய வரும். ” என்று ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.