ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பது விவாதத்திற்குரியதல்ல, இந்திய நாட்டின் தேவை இது, என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மும்பை தாக்குதலின் 13வது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியிலும், பின்னர் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மத்தியில் காணொலி வாயிலாகவும் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்திய நாட்டிற்கு, ஒரே தேசம்; ஒரே தேர்தல் என்பது வெறும் விவாதப்பொருள் அல்ல; இப்போதைக்கான தேவை இதுதான். நாடாளுமன்ற தேர்தல், சட்டசபைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என ஒவ்வொன்றுக்கும் வாக்காளர் பட்டியல் தயாரித்து, தேர்தல் நடத்துவது என்பது, வளங்களை, நிதியை வீணடிக்கும் செயல்.
வளர்ச்சிப் பணிகளில் தேர்தல் உண்டாக்கும் தாக்கத்தை அனைவரும் அறிவார்கள். எனவே, ஒரே தேசம், ஒரே தேர்தல் முறையை அமல்படுத்துவது தொடர்பாக தீவிரமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
அரசியல் சாசனம் தேசத்துக்கு கொடுக்கப்பட்ட நாள் முதல் நூற்றுக்கும் மேற்பட்ட சட்டங்கள் அகற்றப்பட்டுள்ளன. அரசியல் சாசனத்தைப் போன்று பழைய சட்டங்களை திருத்தம் செய்வதை இயல்பாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார்.