அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்களால் வழங்கப்பட்டுள்ள மருத்துவக்கல்வி இடங்களில், ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் தமிழக ஓ.பி.சி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழக அரசும், திமுகவும் உச்ச நீதமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டு முதலே அமல்படுத்தக்கோரி தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு நடப்பு ஆண்டிலேயே இந்த இட ஒதுக்கீடை செயல் படுத்த உத்தரவிட முடியாது என்று கூறி, தமிழகத்தின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
இந்த நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த உடனடியாகத் தலையிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
ஸ்டாலின் தனது கடிதத்தில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே நடை முறைப்படுத்தப்படாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
அரசியல் மற்றும் கருத்தியல் வேறுபாடுகளை கடந்து பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் உரிமைகளுக்காக, நாம் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும்.
பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவக்கல்வி கேள்விக்குள்ளாகும் என்பதால், 50% இட ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் என்று, ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
—