சென்னை,
சிங்கம் சிங்கிளாகதான் வரும் என்று அன்று பிரேமலதா சொல்லி இருந்த நிலையில், தேமுதிகவுடனான கூட்டணி இழுபறியிலேயே உள்ளது.. எனினும் இந்த கடைசி வாய்ப்பை நழுவ விட்டுவிடக்கூடாது என்பதே தொண்டர்களின் ஆதங்கமாக இருக்கிறது.
ஆரம்பத்தில் இருந்தே பாமகவுடன் போட்டி மனப்பான்மையை கொண்டுள்ளது தேமுதிக. எந்த வகையில் பாமகவுடன் தன்னை இணையாக நிறுத்தி கொண்டு போட்டி போடுகிறது என்பது கேள்விக்குறியாக இருந்தாலும், இதை அதிமுக தலைமை கண்டுகொள்ளவே இல்லை என்பதுதான் முக்கியமான விஷயமே. கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று பலமுறை பிரேமலதா பகிரங்கமாகவே வலியுறுத்தி வந்த நிலையில், அக்கட்சியுடன் பேச்சுவார்த்தையை அதிமுக நடத்தாமலேயே இருந்தது.
ஒருவழியாக பாமகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியான பிறகுதான், தேமுதிக பக்கம் தன் கவனத்தை திருப்பியது. இதுதான் தேமுதிகவுக்கு முதல் ஷாக். பாமகவுக்கு இடஒதுக்கீடு விஷயத்திலும் பிரேமலதா எதிர்ப்பை தெரிவித்த நிலையில், அதிலும் ஷாக்தான்.. இதற்கு பிறகுதான் அமைச்சர்கள் விஜயகாந்த்தை சந்திக்க சென்றுள்ளனர்.
அமைச்சர்கள் வருவது முன்னாகவே பிரேமலதாவுக்கு தெரிந்துள்ளது. எனினும் அவர் அமைச்சர்களை சந்திக்கவில்லை.. இது யதேச்சையாக நடந்ததா? திட்டமிட்டு நடந்ததா என்று தெரியவில்லை. கள்ளக்குறிச்சி தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டிருந்தார். பிரேமலதா நினைத்திருந்தால், இந்த கூட்டத்தை ரத்து செய்திருக்க முடியும்.. ஆனால், அவர் அப்படி செய்யவில்லை.
இப்போதுவரை அதிமுக தலைமை மீது பிரேமலதாவுக்கு கோபம் உள்ளது. பெட்ரோல், டீசல் விலையேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதுகூட அதிருப்தி காரணமாகத்தான். தங்கமணி, வேலுமணி, கேவி முனுசாமி, போன்றோர் விஜயகாந்த்தையும், சுதீஷையும் சந்தித்து பேசிவிட்டு வந்துள்ளனர். இதில், விஜயகாந்த் என்ன பேசினார் என்று தெரியவில்லை. ஆனால், சீட் முடிவாகாமல் இழுபறியில் உள்ளது.. 23 சீட்கள் பாமகவுக்கு தரப்பட்டுவிட்டதால், இந்த விஷயத்திலும் பாமகவுடன் போட்டி போட்டு கொண்டிருக்கிறது தேமுதிக.
அதே இடங்களை தங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என்பதுடன் மட்டுமல்லாமல், ராஜ்ய சபா சீட் விஷயத்திலும் முரண்டு பிடித்து வருகிறது. தேமுதிக 20 இடங்களுக்கு மேல் கேட்டு வருகிறது. 20 எல்லாம் கனவிலும் முடியாது.. அதற்கும் குறைவான இடங்கள் மட்டுமே ஒதுக்க முடியும் என்ற நிலைமையில் அதிமுக உள்ளதாக தெரிகிறது.
இதுதான் தேமுதிகவினருக்கு அதிருப்தியை தந்து வருகிறது. இந்த வாய்ப்பையும் விட்டால், கூட்டணியில் இடம் கிடைக்காது என்றும், எவ்வளவு தந்தாலும் அதை ஏற்று கொண்டு, அத்தனை தொகுதியிலும் வென்று காட்டுவதுதான் சிறந்த ஐடியா என்றும் தெரிவிக்கிறார்கள்.
ஏனென்றால், விருப்ப மனு தாக்கலின்போது, முதல்நாள் மட்டும்தான், தாக்கல்கள் வந்தன. ஆனால், 2வது நாளே விருப்பமனு தாக்கலுக்கு சரியாக யாரும் வரவில்லை. இதுவும் தேமுதிக நிர்வாகி அப்செட்டுக்கு காரணமாக இருக்கிறது. முன்பெல்லாம் அப்படி இல்லை. ஒரு தொகுதிக்கு 15 பேராவது பணம் கட்டி விருப்ப மனு தாக்கல் செய்துவிட்டு போன நிலையில், இப்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. சசிகலாவை சந்திப்பதாக இருந்தது.
அது என்னாயிற்று என்றே தெரியவில்லை.. இவ்வளவு நாள் அதிமுக கூட்டணிக்காக காத்து கிடந்துவிட்டு, திடீரென கடைசி நேரத்தில் இன்னொரு கட்சியை ஏற்பதும், அந்த மனநிலைமைக்கு தொண்டர்கள் வருவதும் அவ்வளவு லேசுபட்ட காரியம் இல்லை. இது எல்லாவற்றிற்கும் மேலாக, வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் தேமுதிக உள்ளது. அப்போதுதான், தனி சின்னம் உள்ளிட்ட தங்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டி இருக்கும். அதனால், குறைந்த தொகுதி என்றாலும், நிறைவான வாக்கு வங்கியை பெறுவதிலேயே தேமுதிக முனைப்பு காட்ட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக உள்ளது.