ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் செல்வியை, மரியாதை நிமித்தமாக சமுதாய இயக்கங்கள் மற்றும் சமுதாயக் கட்சி நிர்வாகிகள் சந்தித்து பேசினர். சமூக விரோதச் செயல்களை தடுக்க வேண்டுமென்று அப்போது கேட்டுக் கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் அனைத்து சமூக மக்களும் சகோதர பாசத்துடன், இணக்கத்துடன் பழகி, வசித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் காயல்பட்டிணத்தில் தேவர் குருபூஜை ஊர்வலம் அண்மையில் நடந்தது.
அப்போது, தேவர் சமூகத்துடன் சகோதரத்துவத்துடன் பழகிவரும் காயல்பட்டிணம் மக்களை பிளவுபடுத்தும் விதமாகவும், மத நல்லிணகத்தை சீர்குலைக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்படுத்தும் வகையிலும் சில சமூக விரோதிகள் ஊடுருவி அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் ஊர்வலமாக சென்று, பதட்டத்தை உருவாக்கி, பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக நடந்துள்ளனர். அத்தகைய நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இந்த சூழலில் ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் செல்வியை, காயல்பட்டிணம் பகுதி சமுதாய இயக்கங்கள் மற்றும் சமுதாயக் கட்சி நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது சமூக நல்லிணக்கத்தை கெடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதிகரித்து வரும் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை தடுத்து, சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், தொடர்திருட்டு சம்பவங்களை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் பாப்புலர் ஃப்ரண்ட்,த.மு.மு.க, முஸ்லீம் லீக், ம.ஜ.க, எஸ்.டி.பி.ஐ., டி.என்.டி.ஜே. மற்றும் மொகுதும் பள்ளி நிர்வாகி மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.