கோவை,
தொடரும் கொரோனா தாக்கம் காரணமாக கோவையில் இருந்து தினமும் 6 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
கோவை சர்வதேச விமான நிலையம் கோவை உள்ளிட்ட சுற்றுப்புறங்களை சேர்ந்த 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. கொரோனா நோய் தொற்று பரவலுக்கு முன் தினமும் முப்பதுக்கும் மேற்பட்ட விமானங்கள் கோவையில் இருந்து இயக்கப்பட்டன.
கொரோனா பரவல் முதல் அலை காரணமாக கடந்த ஆண்டு மே மாதம் தினமும் ஐந்து விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. தற்பொழுது கொரோனா நோய்த்தொற்று பரவல் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் தினமும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.
தற்போது தினமும் 6 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதுகுறித்து விமான நிலையவட்டாரங்கள் கூறுகையில், “கோவை விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் மட்டுமே தினமும் அதிக சேவைகளை வழங்கி வருகிறது.
இன்றைய சூழலில் சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் வழங்கப்படுகின்றன. ஒரு சில நாட்கள் ‘ஏர் இந்தியா‘ சேவை வழங்குகிறது. மற்றபடி பிரதானமாக ‘இண்டிகோ‘ நிறுவனம் மட்டுமே அதிக சேவைகளை வழங்கி வருகிறது.
ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த ஸ்பைஸ் ஜெட் மற்றும் கோஏர் நிறுவனங்கள் தற்காலிகமாக சேவைகளை நிறுத்தி வைத்துள்ளன. வெளிநாட்டு விமான சேவை பிரிவில் ஏர் அரேபியா மட்டும் கோவை – ஷார்ஜா இடையே இயக்கப்படுகிறது. அதுவும் வாரத்தில் ஐந்து நாட்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த ஐந்து நாட்களும் இயக்கப்படுவதில்லை. ஒரு சில நாட்கள் விமான சேவை ரத்து செய்யப்படுகிறது,” என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.