நாட்டில் வேகமாகப் பரவும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் அல்லது பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்திக்கிறது.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
நமது நாட்டில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது இதன்காரணமாக நாட்டிலுள்ள மக்கள் மிகுந்த பீதியும் அச்சமும் அடைந்துள்ளனர். தற்போது இந்த கொரோனா தொற்று என்பது ஒரு நாள் தோறும் லட்சக்கணக்கான மக்களைப் பாதித்து வருகிறது.
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோரின் உயிர்களையும் பறித்து வருகிறது. இந்த கொரோனா தோற்றால் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இது ஒருபுறமிருக்க கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் நிலையோ மேலும் பரிதாபமாக உள்ளது,
கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை, வென்டிலேட்டர்கள் பற்றாக்குறை, படுக்கைகள் பற்றாக்குறை என மருத்துவமனையில் உள்ள அனைத்து உபகரணங்கள் பற்றாக்குறையாகவே உள்ளன. தலைநகர் டெல்லியில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர்களுக்கான படுக்கைகள் பற்றாக்குறையாகவே இருக்கின்றது.
இது மட்டுமல்லாமல் பாஜக ஆளும் உத்திர பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மருத்துவமனையின் உள் கட்டமைப்புகள் சரிவர இல்லாத காரணத்தினால் அங்கு ஏற்பட்டுள்ள மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையால் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியிலேயே தங்கி மருத்துவச் சிகிச்சை எடுக்கும் சூழல் நிலவுகிறது.
நூற்றுக்கணக்கானோர் மருத்துவச் சிகிச்சையும் ஆக்சிஜனும் கிடைக்காமல் மரணமடைந்து வருகின்றனர், வட மாநிலங்களில் வீதி எங்கும் சடலங்களாகவும், நோயாளிகளாகவும் இருப்பதை ஊடகங்கள் மூலம் தெரியவருகிறது. இதற்கு முக்கியக் காரணம் மத்திய அரசின் அணுகுமுறையே ஆகும். கொரோனா பெருந்தொற்றின் போது மத்திய அரசு மாநில அரசுகளுக்குத் தேவையான உதவிகளை முன்கூட்டியே கேட்டறிந்து செய்யாமலிருந்தது இதற்கு முக்கியக் காரணமாகும்.
மேலும் மாநில அரசுகள் மத்திய அரசை உதவி கேட்டு அணுகும் போது அதற்குச் சரிவர மத்திய அரசு உதவாதது இந்த பெரும் உயிரிழப்புகளுக்குக் காரணமாகும். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நரேந்திர மோடி அரசு மிக மோசமான தோல்வியை கண்டுள்ளது.
கொரோனாவின் முதல் அலையில் ஏற்பட்ட உயிர்ச் சேதத்தையும், பொருளாதார பேரழிவையும் கருத்தில் கொள்ளாத மத்திய அரசின் அலட்சியப்போக்கு மற்றும் மெத்தனப் போக்கால் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையிலும் அதிகப்படியான உயிர் இழப்பையும் பொருளாதார இழப்பையும் மக்கள் சந்தித்து வருகிறார்கள்.
எனவே, மத்திய பாஜக அரசு இனியும் காலதாமதம் செய்யாமல் இந்த கொரோனா பெருந்தொற்று மேலும் பரவாமல் தடுக்கவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான ஆக்ஸிஜன், வென்டிலேட்டர், படுக்கைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை போர்க்கால அடிப்படையில் மாநில அரசுகளுக்கு வழங்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை இனியும் தாமதிக்காமல் எடுக்கவேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.