கோவில் திருவிழா நிகழ்ச்சிகள் நடத்த தளர்வு அறிவிக்க வலியுறுத்தி… நாட்டுப்புற, நாடகக் கலைஞர்கள் கோரிக்கை மனு

கோவில் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சி நடத்த தளர்வு அறிவிக்க வலியுறுத்தி  இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் நாட்டுப்புற மற்றும் நாடகக் கலைஞர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 10ம் தேதியில் இருந்து கோயில் திருவிழாக்கள் எட்டு மணிவரை மட்டுமே நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின்னர் 10 மணி வரை நடத்தலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த உத்தரவு காரணமாக ஏற்கனவே கோவில் திருவிழாக்களுக்காக முன்பதிவு செய்து வைத்திருந்த கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இதனால் இதனை நம்பியிருந்த நாடக கலைஞர்களுக்கு நிகழாண்டில் வருமானம் முற்றிலும் தடைபட்டுள்ளது. கடந்த ஆண்டும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முழுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேடை நாடகங்கள் கலைநிகழ்ச்சிகள் எதுவும் நடக்காத நிலையில் இந்த ஆண்டும் நாடகங்கள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும்.

நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் மேடை நாடகங்களை உரிய சமூக இடைவெளியுடன் நடத்த அனுமதிக்க வேண்டும். அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கலைஞர்கள் மேலதாளத்துடன் 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மாவட்ட ஆட்சியர் இல்லாததால் அலுவலக அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Translate »
error: Content is protected !!