கோவையில் கொரோனா நோய்த் தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளதா என்பதை கண்டறிய.. ரத்த மாதிரிகள் சேகரிப்பு

கோவையில் கொரோனா நோய்த் தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளதா என்பதை கண்டறிவதற்கான ரத்த மாதிரிகள் சேகரிப்பு நிறைவடைந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளதா என்பதைக் கண்டறிய சுகாதாரத் துறை சாா்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட பகுதிகளில் மக்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின்படி கோவை பொது மக்களிடையே 22 சதவீதம் மட்டுமே நோய் எதிர்ப்பாற்றல் உருவாகி இருந்தது தெரியவந்தது. தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்றின் 2 வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் பொது சுகாதாரத் துறை சாா்பில் மாநிலம் முழுவதும் 2 ஆம் கட்ட ஆய்வு கடந்த வாரம் தொடங்கப்பட்டது.

அதன்படி கோவை மாநகராட்சியில் கே.கே.புதூா், பீளமேடு, காந்திபுரம், ராமநாதபுரம், சிங்காநல்லூர் ஆகிய 5 இடங்களில், ஊரகப் பகுதிகளில் ஆனைமலை, அன்னூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், சூலூர், மதுக்கரை, மேட்டுப்பாளையம், வால்பாறை ஆகிய வட்டாரங்களில் 37 இடங்களில் ஆய்வுகள் நடைபெற்றன. மொத்தம் 42 இடங்களில் தலா 30 போ் வீதம் மொத்தம் 1,260 பேரிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கும் பணிகள் முடிவடைந்தன.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ”கோவை மாவட்டத்தில் எடுக்கப்பட்ட 1,260 ரத்த மாதிரிகள் மட்டுமின்றி, திருப்பூர் – 810, நீலகிரி – 240, நாமக்கல் – 600, ஈரோடு – 780 மாதிரிகள் ஆய்வுக்கு கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை கோவை சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலக ஆய்வகத்தில் உள்ள நவீன கிளியா கருவியின் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன் முடிவுகளைப் பொறுத்தே சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதா என்பது தெரியவரும்,” என்றனர்.

Translate »
error: Content is protected !!